முகமூடி – விமர்சனம்

Cast

யார் கால்ஷீட்டையும் வீணாக்கும் வழக்கமில்லாத மிஷ்கின், இந்த படத்திலும் ஏகப்பட்ட நபர்களின் ‘கால்’ஷீட்டுகளை காட்டுகிறார் நமக்கு. கால்களை விட்டுவிட்டு சற்றே நிமிர்கிற கேமிராவில் அரையிருட்டாக தெரிவது ஹீரோவா, ஹீரோயினா என்கிற முடிவுக்கு நாம் வருவதற்குள் படமே முடிந்து விடுகிறது. ‘ஒரு ஈரானியனின் ஸ்டைலை தமிழ்நாட்ல இருக்கிற ஒரு சாமானியன் காட்டுனா எவன்ங்க புரிஞ்சுக்கிறான்’ என்ற மிஷ்கினின் ஆவேச பேட்டி குங்குமம் குமுதங்களில் வர இன்னும் பத்து பதினைஞ்சு நாளாகும். அதுவரைக்கும் ரிலாக்ஸ் ரசிகர்களே…

கதை?

துணையில்லாத சீனியர் சிட்டிசன்களின் வீட்டை குறிவைத்து கொள்ளையடிக்கிறது ஒரு முகமூடி கும்பல். அவர்களை பிடிக்கிற பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் போலீஸ் அதிகாரி நாசர். புரூஸ்லீ ஆக வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்திருக்கும் ஜீவா தன் வீட்டை பொறுத்தவரை தண்டசோறு. நண்பர்கள் மத்தியில் கோவக்காரன். நாசரின் மகளை ரூட் விடும் ஜீவா, அவரைக் கவர நள்ளிரவில் அந்தப்பக்கம் போய் வரும்போது முகமூடி திருடர்களுக்கும் இவருக்கும் மோதல் வருகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நாசர் சுடப்பட, அவரை சுட்டது ஜீவாதான் என்று நினைக்கிறார் ஹீரோயின் பூஜா ஹெக்டே. அது நான் இல்லை என்று பூஜாவுக்கு நிருபித்து, முகமூடி திருடர்களையும் பிடித்து அழித்து, பணயக் கைதியாக சிக்கிய குழந்தைகளையும் மீட்டு சூப்பர் பவர் மேனாக ஜொலிக்கிறார் ஜீவா. இடையில் குங்ஃபூ வாத்தியார் செல்வா, அவருடன் தொழில் கற்றுக் கொண்ட நரேன். ரெண்டுபேருக்கும் இடையேயான மோதல் என்று ஜீவாவே ஸ்கிரீனுக்கு தேவைப்படாமலும் பல காட்சிகள்.

முதல் பாதி நகர்வு பிரமாதம். அதுவும் மீன் மார்க்கெட்டில் ஜீவா போடுகிற அந்த ஃபைட் சைனீஸ் படங்களையே கூட மிரள வைக்கும். ஆனால் பலு£ன் கொடுத்தால் ஊதி வெடிக்கிற குழந்தை லுக்கில் இருக்கிறார் ஜீவா. (ஒரு மீச வச்சுருக்கலாம்ல?) அநீதியை கண்டு பொங்குகிற பூஜாஹெக்டேவின் கண்ணிலேயே திரும்ப திரும்ப படுகிறார் ஹீரோ. அப்புறம் வருகிற காதலும் ஒரு டூயட்டும் மட்டுமே முக்கால்வாசி டிக்கெட்டுக்கு வொர்த்! மீதி ‘கால்’வாசி?

முதல் பட ஹீரோயின் பாவனாவோடு போச்சு மிஷ்கின் ஹீரோயின் செலக்ட் பண்ணும் லட்சணம். அதன்பின் வந்த படங்களில் எல்லாம் ஜஸ்ட் பாஸ்தான் அவர். இந்த படத்தில் அதுவும் இல்லை. இத்தனைக்கும் அழகிப் போட்டியிலெல்லாம் வென்றவர்தானாம் இந்த பூஜா. பெரிதாக நடிக்கவும் வாய்ப்பு இல்லையா, கோடம்பாக்கத்திற்கு மேலும் ஒரு டம்மி பீஸ்.

படத்தில் தனியாக காமெடியன் இல்லாத குறையை அவ்வப்போது போக்குவது நரேன்தான். ஒரு வில்லனுக்கு நம்பியார் பாணி முரட்டு சிரிப்பு தேவையில்லைதான், அதற்காக அரவாணி ரேஞ்சுக்கு மாற வேண்டுமா என்ன? சண்டைக்காட்சிகளில் இவரும் செல்வாவும் கட்டி உருள்வதெல்லாம் கடின உழைப்பு. கவலைப்பட வைக்கும் சிராய்ப்பு.

கட்டுகட்டாக பணம், கண் கூச வைக்கிற நகைகள் என்று ஜாம் ஜாமென்று வாழும் சில சீனியர் சிட்டிசன்கள் வீட்டில் கொள்ளையடிக்கிறார்கள் முகமூடிகள். (அந்த பெருசுங்களுக்கு எதுக்கு அம்புட்டு காசு? எவன்கிட்ட கொள்ளையடிச்சதோ, நல்லா சாவட்டும் என்று முன் வரிசையிலிருந்து கமென்ட் வரும்போதே ‘சிம்பதி’ செத்துப் போய்விடுகிறதே மிஷ்கின்?)

இரண்டாவது பாதியில் கதை கடத்தல் ஏரியாவுக்குள் புகுந்துவிட, மொத்த ரீலும் ‘ஞே’ என்றாகிறது. பின்னி மில்லில் ஸ்டிரைக்கோ என்னவோ, லொக்கேஷனை கடற்கரை ஓரமாக மாற்றியிருக்கிறார் மிஷ்கின். அதுவும் முக்கால்வாசி இருட்டுக்குள் நடக்கும் அந்த ஃபைட்டை உத்தேசமாக தேடி கண்டுபிடித்து ரசிக்க வேண்டியிருக்கிறது.
கே-வின் பின்னணி இசை லேசான பரபரப்பை ஏற்றுகிறது. பாராட்டுகள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் எல்லாம் ஒரு உயரமான பில்டிங்கில் நின்று கொண்டு கீழே நோட்டம் விடுகிறார் ஜீவா. தனது மார்க்கெட்டை தலைகுப்புற தள்ளப்போகும் படம் இது என்பது தெரிந்தேதான் அப்படி உஷாராக நின்று நோட்டம் பார்த்தாரோ என்னவோ?

 

நன்றி ஆர்.எஸ்.அந்தணன்

Share

Leave a comment

Your comment