தாண்டவம் – விமர்சனம்

Cast

கறிவேப்பிலையால மூடி வச்சாலும் கருவாட்டோட நாத்தம் போகாதுங்கற மாதிரி, இந்த படத்தில் வரும் தீவிரவாதம், குண்டுவெடிப்பு, ஹீரோயிசம் எல்லாத்தையும் தாண்டி, ‘இந்த கதைக்காகவா கோர்ட் வரைக்கும் போனாங்க?’ என்ற கேள்விதான் மூக்கை நீட்டிக் கொண்டு நிற்கிறது. ‘எக்கோ லொகேஷன்’ என்ற வார்த்தை வேண்டுமானால் இவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் காதால் பார்த்து கையால் பொளக்கிற ஹீரோக்களை நாங்க ஏற்கனவே பார்த்துட்டோம், அதுவும் இதே கோடம்பாக்கத்தில்.

லண்டனில் ஆரம்பிக்கிறது கதை. சூன்ய வெளியை வெறித்துக் கொண்டே ஒரு சிலரை போட்டுத் தள்ளுகிறார் விக்ரம். இவர் செய்யும் தொடர் கொலைகளை கண்டு அதிரும் போலீஸ் அதிகாரி நாசர் ஒரு விசாரணை வளையத்தை அமைக்க, அதில் சிக்கிக் கொள்கிறார் விக்ரம். லண்டன் போலீஸ் நம்ம ஊர் டிராபிக் போலீசை விட மோசமாக தப்பிக்க விடுகிறார்கள் விக்ரமை. ஏன் இந்த கொலைகள் என்பதை லட்சுமிராய் ஆற அமர சொல்ல, ஏழெட்டு விஜயகாந்த் படங்களை பார்த்த சந்தோஷத்தோடு நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் டைரக்டர் விஜய்.

விக்ரமுக்கு இரண்டு விதமான நடிப்பை தந்தாக வேண்டிய கட்டாயம். அதை அசால்ட்டாக செய்து தள்ளிவிடக் கூடியவர்தான் அவர். ஆனால் ஏனோ, பார்வையில்லாத விக்ரம் எப்படியிருப்பாரோ அதே மாதிரியே சூனியத்தை வெறித்தபடியே திரிகிறார் பார்வையுள்ள விக்ரமும். எந்நேரமும் தொண்டையில் சூயிங்கம் மாட்டிக் கொண்ட அவஸ்தையோடுதான் நடமாடுகிறார். அனுஷ்காவை காதலிக்கும் அந்த நேரத்தில் கூடவா?

தம்மாத்துண்டு ‘பென் டிரைவ்’ லண்டன் போவதை மோப்பம் பிடிக்கும் அவருக்கு தனது வருங்கால மனைவி என்ன வேலை செய்கிறார் என்று தெரியாதாம். அட இவர்தான் இப்படி என்றால் இவரது மனைவி அனுஷ்காவும் விக்ரம் என்ன வேலை செய்கிறார் என்பதே தெரியாமல் கல்யாணம் கட்டிக் கொள்கிறாராம். இருந்தாலும் டில்லி போலீஸ் கமிஷனரிடம் தன் கணவரை அனுஷ்கா அறிமுகப்படுத்தும் அந்த சீன் அசத்தல்!

அனுஷ்காவின் அழகுக்காக இன்னொரு முறை தியேட்டருக்குள் போகலாம் என்றால், விக்ரமின் குளோஸ் அப் வந்து நம்மை குளோஸ் பண்ணுகிறது.

ரா பிரிவு அதிகாரியான விக்ரம் தனது உயிர் நண்பன் ஜெகபதி பாபுவுக்காக லண்டன் செல்வதும், அங்கே மாட்டிக் கொள்வதும் அதிலிருந்து தப்பிப்பதும் ராஜேஷ்குமாரின் நாவலைப்போல விறுவிறுதான். ஆனால் அங்கேயும் பியானோவை வாசித்து பிராணன் போக வைக்கிறார்கள். சர்ச், அழகிப்போட்டி, எமி, அவரது ஒருதலைக் காதல் என்று ஸ்டோரி டிஸ்கஷனில் செமையாக ஓ.பி அடித்திருக்கிறார்கள் இணை மற்றும் துணை இயக்குனர்கள். (கூடாரத்தை ரீ பிரஷ் பண்ணுங்க விஜய்)

படத்தின் பிற்பாதியில் கொஞ்சூண்டு வந்து போகிறார் லட்சுமிராய். அவரது தோல்விப்பட கணக்கில் கூட வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு துளியூண்டு கேரக்டர் அது.

லண்டனில் கார் ஓட்ட லைசென்ஸ் எடுத்துக் கொண்ட ஒரே பயன்தான் தாண்டவத்தை பொறுத்தவரை சந்தானத்திற்கு. ‘கூகுள்ல தேடுனாலும் என்ன மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான் சார்’ என்கிற அவரது ஒரு பஞ்ச்சுக்கு மட்டும் சிரியாய் சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.

தெலுங்கு ஹீரோ ஜெகபதி பாபு திடீர் வில்லனாகி ட்விஸ்ட் அடிப்பதெல்லாம் எதிர்பார்த்த முடிவுதான். இருந்தாலும் அவரது கம்பீரம் அசர வைக்கிறது.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் வில்லேஜ் பிளாஷ்பேக் காட்சி மட்டும் மனதில் கோலம் போடுகிறது. மற்றபடி அவரும் கேமிராவை இருட்டுக்கு தாரை வார்த்துவிட்டு நிற்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு டூயட்டை ரசிக்க முடிகிறது.

கோடம்பாக்கத்தில் மடி நிறைய பசியோடும், நல்ல கதைகளுமாக ஓரு நு£று பேர் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தன் வீட்டு காம்பவுண்ட் பக்கம் கூட விடாத விக்ரம் போன்ற ஹீரோக்களுக்கு இப்படியொரு படம் தேவைதான்.

 

நன்றி ஆர்.எஸ்.அந்தணன்

Share

Leave a comment

Your comment