இளநீர்.

“என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!…”

கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          “அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே……”
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.
          “வாங்கோ அண்ணை,… இந்த காண்டவன வெயில்ல எங்க போறியள்?…”
          “இல்ல சுந்தரத்தார் தோட்டத்திலே தேங்காய் பறிக்க ஆள் அனுப்பினான். அதுதான் ஒருக்கா பார்த்து வரவெண்டு வெளிகிட்டனான். வழியில உம்மை பார்த்ததும் சும்மா விசாரிச்சுட்டு போவம் எண்டுதான்… எப்பிடி இருக்கிறீர்? உம்மிட அவாக்கு இப்ப உடம்பு பரவாயில்லையோ? மகண்ட சேதி ஏதும் தெரியுமோ?….”
 அடுக்கடுக்காக கேள்விகள் அடுக்கினார் பரமசிவதார்.
          “எதோ இருக்கிறம் …..”
என்றவாறு உள்ளே திரும்பி
          “கமலம் பரமசிவமண்ணா வந்திருக்கிறார். ஒரு தேத்தண்ணி கொண்டு வா…….”
இரைந்தார்
          “இல்ல சுந்தரம். எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு. பிறகு ஒரு நாள் வாரன். ஆறுதலாக இருந்து கதைப்போம். ஒரு எட்டு தோட்டத்தையும் பார்த்துட்டு போகணும். வாரன்…. உள்ளேயும் சொல்லுங்கோ….”
என்ற வண்ணம் மீண்டும் தெருவில் இறங்கி நடந்தார் பரமசிவதார்.
     “ஓம் அண்ணே பிறகு நேரமிருக்கேக்க வாங்கோ……”
ஏதேதோ சொல்லி வழியனுப்பினார் சுந்தரம். பரமசிவம் கேட்ட கடைசி கேள்வி மீண்டும் சுந்தரதார் காதில் எதிரொலித்தது.
‘மகன்ட சேதி ஏதும் தெரிமோ?’
சுந்தரம் கமலம் கலியாணமாகி 5 வருடங்கள் பிள்ளை செல்வம் கிடைக்கவில்லை. கமலமும் சுந்தரமும் குழந்தை வேண்டி எல்லா விரதங்களும் இருந்து பிறந்தவன் தான் கண்ணன். கண்ணன் ஒரே பிள்ளை. நீண்ட காலத்தின் பின் பிறந்தவன். எனவே பெற்றோர் அவனுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தனர். சிறு வயதிலையே மிகுந்த சுட்டியாக வந்தான் கண்ணன். கண்ணனின் குழப்படிகள் பொறுக்காமல் எப்போதாவது சுந்தரர் கை ஓங்கினால் உடனே கமலம் வந்து நிற்பாள்.
     “தவம் கிடந்தது பெத்த பிள்ளையை அடிக்க வாரியலே. உங்களுக்கு அறிவிருக்கே…..”
சரமாரியாக பொறிய ஆரம்பிப்பாள் கமலம். சுந்தரம் ஏன் வாதம் செய்து சண்டையை வளர்ப்பான் எண்டு ஒதுங்கி விடுவார். குழந்தை பிள்ளைக்கும் நாய் குட்டிக்கும் செல்லம் குடுக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவது கண்ணனின் விசயத்தில் சரியாகத்தான் இருந்தது. வளர வளர நினைத்ததெல்லாம் வேண்டுமென அடம்பிடிக்க ஆரம்பித்தான். சுந்தரமும் கமலமும் அவனுக்காகவே வாழ ஆரம்பித்தனர். அளவுக்கு மீறிய செல்லம், கண்ணடிக்க என்று யாருமற்ற நிலை கண்ணன் படிப்பில் ஆட்டம் காட்ட வைத்தது. எதோ ஒரு மாதிரி க.பொ.த சாதாரணதரம் வரை படித்து முடித்தான். அதற்கு மேல் படிக்குமாறு கமலம் அவனிடம் எவ்வளவோ கெஞ்சியும் முடியாமல் போனது.

பள்ளி படிப்பை நிறுத்தியவன் காதல் படிப்பு படிப்பதாக சுந்தரம் காதுக்கு எட்டியது. கூப்பிட்டு கண்டிக்க முடியாது. கமலம் கத்துவாள் என்பதை விட அவன் வயதும் நாட்டு நிலையம் சுந்தரருக்கு கலக்கத்தை தந்தது. சில தினங்களுக்கு முன் தான் பக்கத்து தெருவில் தகப்பன் அடித்ததில் ஒரு மகன் வீட்டை விட்டு ஓடி இருந்தான்.

சுந்தரம் ஒன்றும் வசதியானவர் கிடையாது. கமலத்தை திருமணம் முடிக்கையில் கமலம் தனக்குரிய சில நகைகளுடன் ஒரு வீடும் சீதனமாக கொண்டு வந்திருந்தாள். சுந்தரரின் வாழ்வில் பரந்தனில் இரண்டு வயல் காணி சொந்தமாக இருந்தது. சுந்தரம் தன் உழைப்பில் ஒரு டக்டர் வாங்கி இருந்தார். இரண்டு வயல் குத்தகைக்கு எடுத்து நான்கு வயல்களையும் செய்வார். அத்தோடு வயல் உழவு, சூடடிப்பு என டக்டரையும் ஓடுவதில் ஒரு கணிசமான வரும்படி இருந்தது. வயல் இல்லாத நேரத்தில் வன்னியில் இருந்து கிடுகு, தேங்காய் மட்டை ஏற்றி யாழ் பகுதியில் ஊர் ஊராக சென்று விற்பார். சோற்றுக்கு கஷ்டமில்லை என்றாலும் பெரிய மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் கட்டவில்லை அவர்.

ஆனாலும் கண்ணன் கேட்ட எதையும் சுந்தரம் தம்பதியினர் மறுத்ததில்லை. பரீட்சை முடிந்த கையேடு கண்ணன் தாயிடம் கேட்டான்
     “அம்மா எனக்கொரு மோட்டர் சைக்கிள் வேணும். அப்பாட்ட சொல்லி வாங்கித்தானே.”

உடனடியாக தாயின் நகைகள் அடகு வைக்கப்பட்டு ஒன்றே கால் லச்சத்துக்கு கிறோ ஹோண்டா பைசன் பிளாஸ் வாங்கி கொடுக்கப்பட்டது. தினமும் அதில் ஏறி மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சும்மாவே சுற்றி வந்தான். அதற்க்கு பெற்றோல் செலவு என தினமும் சில நூறு ரூபாக்களை சுந்தரம் இழக்க வேண்டி வந்தது. நாட்டு நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஆங்கங்கே ஆட்கள் தினமும் காணமல் போய்கொண்டு இருந்தனர். ஒரே குழு என்ற நிலை மாறி இன்று பல இனம்தெரியாத பெயரில்லாத குழுக்கள் புதிது புதிதாய் முளைத்து அட்டகாசத்தை ஆரம்பித்திருந்தன. இந்த சூழலில் கண்ணன் மோட்டார் சைக்கிள் ஓட்டம் பெற்றோருக்கு கலக்கத்தை தர ஆரம்பித்தது. கண்ணன் இப்பொழுது நல்ல வாட்டசாட்டமான ஆண்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து இப்போது ஜிம் வேறு சென்று வந்தான். உடல் உருண்டு திரண்டு அழகிய ஆணழகன் ஆகி இருந்தான். எங்கே தன் மகனும் காணமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவானோ என்ற கலக்கம் ஒருபுரம், நகரின் வாகன நெரிசல் அதிகரித்திருந்ததும் கண்ணன் மோட்டார் சைக்கிளில் அவன் வாலிப சாகசம் காட்ட முயற்சிப்பது ஏன் எல்லாம் ‘என்ன நேரம் அவன் விபத்து செய்தி வரும்’ என்றே பெற்றோர் இருவரும் தவிக்க ஆரம்பித்தனர். சுந்தரமும் கமலமும் நன்கு ஜோசித்து கண்ணனை வெளியில் எங்காவது அனுப்பி விடுவதென முடிவு செய்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை விட கண்ணன் அவர்கள் முடிவை வெகுவாக ஆதரித்தான். பணம் தான் ஒரு பிரச்சனை.

சுந்தரம் யோசிக்கவில்லை ஒரே ஒரு மகன் அவனுக்கு இல்லாதது எதற்கு? வீட்டையும் காணியையும் அடைகு வைத்து சில இலட்சங்களை புரட்டினார். உழவு இயந்திரம், மோட்டர் சைக்கிள் மூலமும் சில இலட்சங்கள் கிடைத்தன. வேலைகள் துரிதமாக நடந்தன கமலம் தன் பங்குக்கு கண்ணனின் சாதகத்தை பலன் பார்த்தாள். கண்ணனுக்கு சுக்கிரதிசை ஆரம்பமாகி இருந்ததுடன் பத்தில் வியாழன் பத்தியை விட்டு கிளம்பும் என்று யோசியன் அடித்து கூறினான். கமலம் அர்ச்சனைகள், பிராத்தனைகள் என கோயில்களுக்கு சென்றாள். கமலத்தின் வேண்டுதலோ, கண்ணனின் வியாழன் பலனோ கண்ணன் மிக விரைவிலே புகலிட நாடொன்றுக்கு சென்று மிக விரைவில் பிரஜா உரிமையும் பெற்றுக்கொண்டான். எவ்வளவு விரைவில் அவன் வெளி நாடு சென்றானோ அவ்வளவு விரைவாக அவனது தாயையும், தந்தையையும், நாட்டையும் மறந்தான். அடவு வைத்த சொத்துக்கள் அறுதியாகின. சுந்தரமும், கமலமும் வீடுவாசல் இழந்து தெரிந்தவர்கள் காணியில் கொட்டில் வீடு அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.
     “என்னப்பா தேத்தண்ணி கேட்டியல் பரமசிவமண்ணாக்கு. இங்க நீங்க மட்டும் நிக்கிறியள்? இந்தாங்கோ நீங்களே இந்த தேத்தண்ணியை குடியுங்கோ…… எனக்கு குசினில வேலை இருக்கு…….”
என்ற படி வந்த கமலம் தேனீரை திண்ணையில் வைத்து விட்டு உள் திரும்பினால்.வந்தவள் அறியாதவண்ணம் விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்தபடி பெருமூச்சொன்றை விட்ட வண்ணம் நிஜ  உலகுக்கு திரும்பினார் சுந்தரம். கமலம் வைத்து விட்டு சென்ற தேநீரில் இருந்து வந்த ஆவியை பார்த்தபடி இருந்தார். எதிர் வீட்டு வானொலியில் இருந்து பாடல் கேட்டது.

     “தென்னையை வைச்சா இளநீரு…….. பிள்ளையை பெத்தா கண்ணீரு…..”

Share

Leave a comment

Your comment