சாட்டை – விமர்சனம்

ஒரு சாக்பீஸ் மாதிரி தன்னையே கரைத்துக் கொண்டு மாணவர்களை வளர்த்தெடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆலயங்கள்….! இதைதான் சொல்ல வருகிறது சாட்டை.

கமர்ஷியல் பூதங்களின் ‘கரகரப்பு’ சப்தங்களுக்கு நடுவில் வந்திருக்கும் அருமையான தாலாட்டுதான் இந்த சாட்டை. இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கே தனிச் துணிச்சல் வேண்டும். அதையும் பெரும் பணத்தை கொட்டி சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பிரபுசாலமன். தேங்க் யூ ஜீசஸ்.

வந்தாரங்குடி கவர்மென்ட் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் பிசிக்ஸ் ஆசிரியர் சமுத்திரக்கனி. படிச்சா படி, படிக்காட்டி போ… என்கிற அலட்சியத்தோடு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களும், வட்டிப் பணம் தராதவர்கள் லிஸ்ட்டை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்திருக்கும் ஏ.ஹெச்சமுமாக, மிக சுவாரஸ்யமான விலங்குகள் திரியும் திடலாக இருக்கிறது அந்த ஸ்கூல். மாணவர்களின் மீது நிஜமான அக்கறையுள்ள சமுத்திரக்கனியை அங்கிருந்து விரட்டியடிக்க நினைக்கும் அத்தனை பேரையும் மண்ணை கவ்வ வைத்து எல்லார் மனசிலும் இடம் பிடிக்கிறார் கனி.

முதலில் வில்லன்களை ஜெயிக்க வைத்து இறுதியாக ஹீரோவுக்கு மெடல் தருவதுதானே சுவாரஸ்யமான திரைக்கதைக்கு அழகு? அதையும் கோடு மாறாமல் செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் அன்பழகன். ஆனால் எவ்வித அலுப்பும் நமக்கு ஏற்படாமல்.

சமுத்திரக்கனியை விட்டால் இந்த கேரக்டரை நேர்மையாக சுமக்க வேறு யாரால் முடியும்? அவ்வளவு அழகாக, கம்பீரமாக, தயாளன் வாத்தியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் கனி. ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் ஒரு க- வை எழுதி அதையே ஒரு விளையாட்டாக்குகிற யுக்தியில் ஆரம்பிக்கிறது அவரது கற்பித்தல் சுவாரஸ்யம். (இந்த ஏரியாவில் சற்று ஆழமாக யோசித்திருக்கிறார் இயக்குனர், வெல்டன்) மாணவர்களை பேசிப் பேசியே தன் வழிக்கு கொண்டு வருகிற கனியின் சாமர்த்தியத்தை எல்லா வாத்தியார்களும் கற்றுக் கொண்டால் பிரம்புக்கு வேலையேது?

மறைமுகமாக அல்ல, நேரடியான வில்லனாகவே ஆகிவிட்டார் தம்பி ராமய்யா. அந்த பள்ளியை தன் கைக்குள் வைத்திருக்கும் அவரது ஆணவத்திற்கு முதல் சம்மட்டியாக வந்து சேரும் சமுத்திரக்கனியை அவர் பழி வாங்குகிற காட்சிகளும், நேரடியாக உதாசினப்படுத்தும் காட்சிகளும் அதிர வைக்கிறது. ஒரு காட்சியில் இரண்டு கைகளையும் சமுத்திரக்கனிக்காக தட்டும் தம்பியின் ஸ்டைல், அடேயப்பா… எவ்வளவு கொடூரம்.

மாவட்டத்திலேயே முதல் இடத்திற்கு அந்த பள்ளியை கொண்டு வரும் சமுத்திரக்கனி நடுவில் படுகிற துன்பங்கள் இவ்வளவு பாலிடிக்ஸ் இருக்கிறதா ஆசிரியர்-மாணவி குருபக்திக்கிடையில் என்று பதற வைக்கிறது.

ப்ளஸ் டூ பசங்களின் காதல் எந்தளவுக்கு மெச்சூரிடியாக இருக்கும் என்பதை மகிமா-யுவன் காதலை கொண்டு அளவிட்டிருக்கிறார் அன்பழகன். ‘ஏன் என்னை திரும்பி பார்த்தே?’ என்று கேட்கும் யுவனுக்கு, மகிமா சொல்லும் பதில் கூட சாட்டைதான். நல்லவேளையாக இவர்கள் இருவரும் மீண்டும் காதலிப்பதாக கதையை நகர்த்தி, படத்தின் இமேஜை தகர்க்காமல் இருந்தார் டைரக்டர். வாழ்க…

யுவன் புதுமுகம் இல்லை. இவரது முந்தைய படங்கள் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையின் திமிரான விசிட்டிங் கார்டாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த படம், யுவன் தேர்ந்தெடுத்த முடிவால் வந்த நல்ல ஆரம்பம்!

மகிமாவிடம் திமிரே இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது அழகு. நல்ல கதைகள் அமைந்தால் கேரளா டிரான்ஸ்போர்ட் நஷ்டத்தில் இயங்கக் கூடும்.

இவ்வளவு நல்ல கதையில் பின்னணி இசைக்காக ஏன் மெனக்கடவே இல்லை டி.இமான்? ஸ்டூடியோவில் இருக்கும் அத்தனை இசைக்கருவிகளையும் இஷ்டத்துக்கு உருட்டி தள்ளியிருக்கிறார். ஆனால் அந்த பாவத்தை தன் மெட்டுகளின் மூலம் ஈடுகட்டி தப்பிக்கவும் வைத்திருக்கிறார். சகாயனே… ராங்கி ராங்கி… இழப்பதற்கு எதுவும் இல்லை… இம்மூன்று பாடல்களுமே அற்புதம்.

ஜீவனின் ஒளிப்பதிவில் அதிக தடபுடல் இல்லை. அதுவே சில காட்சிகளுக்கு யதார்த்தம் சேர்க்கிறது.

பொதுவான ரசிகர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட வாத்தியார்களுமே பார்க்க வேண்டிய படம் இது. சாட்டையால் விளாசியிருக்கிற புதுமுக இயக்குனர் அன்பழகன், அதே சாட்டையால் ரசிகர்களை கட்டிப்போடவும் செய்திருக்கிறார். இப்படத்திற்கு வணிகரீதியான வரவேற்பு அமையட்டும்… ஆமென்!

 

நன்றி ஆர்.எஸ்.அந்தணன்

Share

Leave a comment

Your comment