சுந்தர பாண்டியன் – விமர்சனம்

Cast

இனிஷியல் மாதிரி எப்பவும் மாறாமல் அமைந்துவிடும் சில ஃபார்முலாக்கள்! தன் படங்களும் அப்படிதான் என்பதை சசிகுமார் தன் சிஷ்யன் படத்தில் நடிக்கும் போது கூட நிருபிக்கிறார். நட்பு என்கிற சட்டையையும், துரோகம் என்கிற பனியனையும் அணிந்து கொண்டு சசிக்குமார் நடத்தியிருக்கும் மற்றுமொரு ஃபிரன்ட்சி டிரஸ் காம்படிஷன்தான் இந்த சுனா பாணா. ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு சீனிலாவது ‘கொல்றாய்ங்கடா’ என்ற அலுப்பு தட்ட வேண்டுமே? ம்ஹும். புதுமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு ‘எஸ் சார்’ சொல்லுது மொத்த கூட்டமும்!

பிரண்டோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவதற்காக கிளம்பும் சசிகுமாருக்கு திடீர் தாக்குதல். ‘நான் லவ் பண்ணுறது அவனையில்ல. உன்னைதான்’ என்கிறாள் அவள். தர்ம சங்கடத்துக்கு ஆளாகும் சசி, ஒரு கட்டத்தில் தர்மத்தையும் சங்கடத்தையும் விரட்டியடித்துவிட்டு அவளோடு மணமேடை வரைக்கும் போக எத்தனிக்க, கூட இருந்த நண்பர்களே குழி பறிக்கிறார்கள் சசிகுமாருக்கு. கொல்லப்பட்டாரா, குழிக்குள் தள்ளப்பட்டாரா என்கிற கேள்விக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

களிமண்ணாக இருந்தாலும் பொம்மை பிடிக்க முடியும் என்பதை பரோட்டா சூரி என்ற ஒருவரை வைத்தே நிரூபித்திருக்கிறார் பிரபாகரன். அட… என்னமாய் கலகலப்பூட்டுகிறார்ப்பா அந்தாளு? முழு படத்தையும் தன் வாய் சவடாலால் நடத்திச் செல்வது இவர் என்றால், கோழி முட்டை கண்களும் குறுகுறு பார்வையுமாக விடலை பசங்களை கொத்தி எடுக்கிறார் லட்சுமி மேனன். இவ்விரு சக்கரங்களும் பொருத்தமாக அமைந்திருக்க புரவியாய் இழுத்துக் கொண்டு ஓடுகிறது சசிகுமாரின் லாவகங்கள்.

படத்தில் இவர் ரஜினி ரசிகன் என்பதால் தம்பிக்கு எந்த ஊரு ரஜினி சட்டை, கூலிங் கிளாஸ் மற்றும் மேனரிசங்களுடன் சசி நிற்பதே லேசாக புகைச்சலை வரவழைக்கிறது நமக்கு. கொஞ்ச நேரத்தில் ‘இதெல்லாம் ஓவர்டா’ என்று உணர்ந்து கொள்கிறார் அவர். அப்புறம் அந்த மேனரிசங்களை மூட்டை கட்டி பரணில் எறிந்துவிட்டு வழக்கமான சசியாக நடமாட ஆரம்பிக்கிறார். (சமத்து…) அந்த க்ளைமாக்ஸ் சண்டை அடிவயிற்றில் புளி கரைக்குதுப்பா.

வெறும் அழகை மட்டும் வைத்துக் கொண்டு காலந்தள்ள முடியாது என்பதை வரும்போதே உணர்ந்து வைத்திருக்கிறார் லட்சுமிமேனன். எழுதாத வசனங்களை கூட பேசித்தள்ளுகின்றன அவரது கண்கள். ‘எனக்கும் தெரியும் விட்டுப்பிடிக்கிற வித்தை’ என்று அவர் சொல்கிற போது தியேட்டர் கிழிகிறது விசில்களால். அப்புக்குட்டியெல்லாம் தன்னை சைட் அடிக்கிறாரே என்ற அவமானத்தை அப்படியே வெளிப்படுத்துகிற அந்த கண்கள், சசிகுமாரை மட்டும் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் அழகை என்னவென்று வர்ணிக்க? (வாம்மா மின்னலு)

‘தேமே’ என்று அறிமுகமாகி வில்லன் ரேஞ்சுக்கு விஸ்வரூபம் எடுக்கும் அப்புக்குட்டியின் போர்ஷனும் அசத்தலாக நடை போடுகிறது. இவர் மட்டுமல்ல, படத்தில் சும்மாச்சுக்கும் வந்து போகும் கேரக்டர்கள் கூட ஆறேழு வருஷம் ஆக்டிங் கோர்ஸ் படிச்ச மாதிரி அசத்திட்டு போறாங்க. குறிப்பாக சசிகுமாரின் அப்பா நரேனும், லட்சுமியின் அப்பா தென்னவனும்.

முழு வில்லனாகவே மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி. வெறுப்பை உமிழும் அந்த கண்களில்தான் எத்தனை கொடூரம்?

ஒரு நல்ல படத்திற்கு ஏதாவது ஒன்று திருஷ்டிப் பொட்டாக இல்லையென்றால் எப்படி? இந்த படத்தில் அந்த குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ரஹ்நந்தன். ஒரு பாடலை தவிர மற்றதெல்லாம் தெருவோர கச்சேரிக்கு கூட தேறாது.

சற்றே ஓய்ந்த சசிகுமாரை மறுபடியும் பிஸி குமாராக்கியிருக்கிறான் இந்த சுனா பாணா!

 

நன்றி ஆர்.எஸ்.அந்தணன்

Share

Leave a comment

Your comment